நகைச்சுவையுடன் நாடகம் தந்த படைப்பாளி வரணியூரான்!

Monday, September 7, 20150 comments

வானொலி, தொலைக்காட்சி நாடக படைப்பாளர் கணேசபிள்ளை பற்றி மயில்வாகனம் சர்வானந்தா தரும் சிறப்புத் தகவல்கள்.
இலங்கை வானொலியிலே தேசிய சேவை, வர்த்தக சேவை என இருந்த காலத்திலிருந்தே இரண்டு சேவைகளிலுமே தனது நடிப்புத் திறனை, எழுத்தாற்றலை, நகைச்சுவை சார்ந்து படைத்த படைப்பாளிகளில் எஸ். எஸ். கணேசபிள்ளையும் ஒருவர்.

நாடகத்தின் பிதா என வானொலி ரசிகர்கள் கருதுகின்ற சானா அவர்களை குழுவாக வரித்துக்கொண்டு தனது நாடக எழுத்தோட்டத்தில், நடிப்பில் பல பரிமாணங்களை ரசிகர்களுக்கு வானொலி, தொலைக்காட்சி மூலம் தந்தவர்.
உலகம் முழுவதுமே இலக்கிய வடிவங்களும், கலைகளும் காலத்துக்குக் காலம் மாற்றம் அடைந்தே வந்திருக்கின்றன. 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நாடு பூராவும் சிறப்பாகச் சென்றடைந்தது. அப்போது வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பாகும் போது அதற்கென ரசிகர் கூட்டம் பரந்து காணப்பட்டது.

அவ்வேளை பல நாடகாசிரியர்களின் நாடகங்களும் இலங்கை வானொலியில் தயாரிக்கப்பட்டு நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஒலித்தன. அதுமட்டுமல்ல கடல் கடந்தும் வானொலி தனது வீச்சினைச் செலுத்தியதால் இந்தியாவிலிருந்தும் பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. வரணியை தனது பிறப்பிடமாகக் கொண்ட எஸ். எஸ். கணேசபிள்ளை தனது பெயருடனேயே ஊரையும் வரித்துக்கொண்டார்.

வரணியூரானின் எழுத்து நகைச்சுவை பொதிந்தது, சில சமயங்களில் இரட்டை அர்த்தங்களையும் கலந்து தரும் தன்மை அவரிடம் இருந்தது. யாழ்ப்பாணத் தமிழில் அச்சொட்டாக எழுதும் திறமை கைவரப்பெற்றவர்.“

இவரது எழுத்து தனித்துவமாகத் தெரியும் தன்மை கொண்டது. நாடகத்தின் கருவிலே ஏதோ ஒன்றை அழுத்தி உரைக்கும் குணம் இவரிடம் இருந்தது.
இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நாடகத்தின் உச்சக் கட்டத்தி லேயே தெரிய வரும். நகைச்சுவை யோடு சில சிந்தனைக்கான விடயங் களையும் ஆங்காங்கே தூவியிருப்பார்.

இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார். கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர். புளுகர் பொன்னையாவாசி பலரையும் சிரிக்கவைத்தவர்.
நகைச்சுவை நாடகத்தையே அதிகமாக எழுதும் ஆவல் அவரிடம் அதிகம் இருந்தது. இவரது தந்தையாரான அண்ணாவியார் செல்லையாவின் கலைத்திறன் இவரிடமும் பொதிந்திருந்தது.

விளம்பர நிகழ்ச்சியாக ஒருவருடம் ஒளிபரப்பான ‘இரைதேடும் பறவைகள்’ நாடகம் பலரது அபிமானத்தைப் பெற்றது. சமுதாயத்தில் நிகழும் பல சம்பவங்களை கோர்வையாக்கி நகைச்சுவையாகத் தந்த பெருமை கணேசபிள்ளை அவர்களையே சாரும். இரைதேடும் பறவைகள் நாடகம் பின்னாட்களில் புத்தக வடிவில் வெளிவந்தது. இந்த நாடகத்தை நான்தான் தயாரித்தேன் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். நாடகத் தயாரிப்பு என்பது ‘சானா’ காலத்திலிருந்தே பிரபலமானது. நாடகப் பிரதிக்குத் தேவையான ஒலிக்குறிகளை ஆங்காங்கே சேர்த்துக்கொள்வது, நடிகர்களுக்கு பயிற்சி கொடுப்பது.
காட்சி மாற்றம் என்பதை வெளிப்படுத்துவது போன்றவற்றின் மூலம் கேட்போருக்கு உண்மையான சம்பவம் நடப்பது போன்ற உணர்வை ஊட்ட ஒலிக் குறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.

ணேசபிள்ளையின் தொலைக்காட்சி நாடகங்களான நம்பிக்கை, இனிப்பாருங் கோவன், வருடம் பிறந்தது, வாடகை வீடு, பாசச் சுமை என்பன பிரபலமானவை. மேடை நாடகத்தில் ‘ஒருத்தருக்கும் சொல்லாதே’ தாத்தாவின் ஆசை புளுகர் பொன்னையா, அசட்டு மாப்பிள்ளை என்பன ரசிகர்களைக் கவர்ந்தவை.

1992 இல் இலங்கை வானொலி தமிழ் நாடகவினை நடத்தியது. இதில் ‘மனத்திரை’ என்ற சமகால இனப்பிரச்சினையை மையமாக வைத்து நாடகம் ஒன்று மேடையேறியது. மஹதிஹசன் எழுதிய கருவுக்கு நெறியாள்கை செய்தவர் பி. எச். அப்துல் ஹமீட். இந்த நாடகத்தில் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்கள் பலர் நடித்தவர்கள். இதில் வரணியூரானும் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார்.

எஸ். எஸ். கணேசபிள்ளை அவர்கள் பழகுவதற்கு இனியவர். நல்ல கதாசிரியர், நல்ல நடிகர், நல்ல விமர்சகர், இவையே அவரைத் ஒரு சிறந்த கலைஞராக உருவாக்கியது. இவரது கலைத்திறமையைப் பாராட்டி கமலாலயம் ‘கலைத்தென்றல்’ பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
1995 இல் நாடகக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு ‘தாத்தாவின் ஆசை’ நாடகத்தினை கனடாவில் பல பாகங்களிலும் நடத்தி இடம்பெயர்ந்தவர்களையும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தார். நல்ல உள்ளம் கொண்ட சிறந்த கலைஞர் இப்போது எம்முடன் இல்லை. இவரது இழப்பு வானொலி நாடகத் துறைக்கு பேரிழப்பு.

கலாபூஷணம் 
மயில்வாகனம் சர்வானந்தா
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972