வரணி பிரதேசத்தில் அமைந்துள்ள 52 ஆவது பிரிகேட் தளத்தில் அமைந்திருந்த வீடுகள், காணிகள் என்பன கடந்த சனிக்கிழமை அந்தந்தக் காணிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களிடம் படைத்தரப்பினரால் கையளிக்கப்பட்டன.
படைத்தரப்பினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முகாமிலிருந்து வெளியேறிய போதும் அங்கிருந்த கட்டடங்கள் , தளபாடங்கள் போன்றவற்றை அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. குறித்த பகுதியில் 6 நிரந்தர வீடுகள், மற்றும் உரக்களஞ்சியம் என்பன அடக்கப்பட்டிருந்தன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச பிரதமரான இருந்த காலத்தில் அவரால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் பிரகாரம் 100 வீடுகளும் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கட்டடங்கள் தற்போது இங்கு இல்லை. இந்த வீட்டுத் திட்டங்களில் குடியிருந்தோர் வறுமைக்கோட்டில் இருந்தவர்கள் என்பதுடன் காணியற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படைத்தரப்பிடம் இருந்து இந்தக் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டமையால் இந்தப் பகுதியில் அமைந்திருந்த மூன்று பிரதான பாதைகள் மீண்டும் பொதுமக்களது பாவனைக்கு திறக்கப்படும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஆஸ்பத்திரி இடைக்குறிச்சி வீதி, அம்மா கடைவெட்டுக்குளம் வீதி மற்றும் கொத்தாளை வீதி என்பனவே மூடப்பட்ட நிலையில் இருந்தன. அந்தப் பகுதிகளுக்குள் தொலைதொடர்பு கோபுரம் ஒன்றும் அமைந்துள்ளது. குறித்த பகுதியில் இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களில் சிலர் வெளிநாடுகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






.gif)

Post a Comment